மாகாணசபைத் தேர்தலை நடத்தும் இயலுமை தொடர்பில் ஆய்வு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை தொடர்பில் ஆராய குழு நியமனம்

by Staff Writer 15-08-2019 | 7:12 PM
Colombo (News 1st) மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்வதற்கு பிரதம நீதியரசர் தலைமையில் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணய அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படாமையால், மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை ஜனாதிபதி கோரியிருந்தார். ஜனாதிபதி தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான 5 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. புவனேக அலுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் விண்ணப்பத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் தொடர்பான எழுத்து மூலம் சமர்ப்பணங்கள் இருக்குமாயின், எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு பிரதம நீதியரசருக்கு ஜனாதிபதி அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.