சரிவிலிருந்து மீண்டது இலங்கை

நியூஸிலாந்துடனான முதல் டெஸ்ட்: சரிவிலிருந்து மீண்டது இலங்கை

by Staff Writer 15-08-2019 | 9:05 PM
Colombo (News 1st) நிரோஷன் திக்வெல்ல மற்றும் சுரங்க லக்மாலின் துடுப்பாட்டத்தின் மூலம் நியூஸிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 249 ஓட்டங்களைப் பெற்றதுடன், பதிலளித்தாடும் இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை இன்றைய ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது. காலியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களுடன் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. ரொஸ் டெய்லர் 86 ஓட்டங்களுடனும், மிச்செல் சான்டர் 8 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். ரொஸ் டெய்லரினால் இன்று மேலதிகமாக ஓர் ஓட்டத்தைக்கூட பெற முடியவில்லை. மிச்செல் சான்டர், போல்ட், டிம் சவுத்தீ ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 249 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது. பந்துவீச்சில் அகில தனஞ்சய 5 விக்கெட்களையும், சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 27 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. லஹிரு திரிமான்ன 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 39 ஓட்டங்களுடன் வெளியேறினார். குசல் மென்டிஸ் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஜோடி மூன்றாம் விக்கெட்டிற்காக 77 ஓட்டங்களைப் பகிர்ந்தது. தனது 10 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை அடைந்த குசல் மென்டிஸ் 53 ஓட்டங்களைப் பெற்றார். 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை அணி தடுமாற்றத்திற்குள்ளானது. தனது 34 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்த அஞ்சலோ மெத்யூஸ் 50 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 161 ஓட்டங்களுக்கு ஏழாவது விக்கெட்டை இழந்த போதிலும் நிரோஷன் திக்வெல்ல மற்றும் சுரங்க லக்மால் ஜோடி 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது. நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களுடனும் சுரங்க லக்மால் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.