கோட்டாபயவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் சர்ச்சை

by Staff Writer 15-08-2019 | 7:27 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அமெரிக்க பிரஜாவுரிமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் உள்வாங்கப்படாமை அதற்கான காரணமாகும். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஏற்ப, இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் இலங்கையின் ஜனாதிபதியாக முடியாது. கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அமெரிக்க பிரஜாவுரிமை கிடைத்திருந்தமை கடந்த காலத்தில் நாட்டில் பிரதான தலைப்பாக அமைந்தது. பின்னர் பிராஜாவுரிமையை நீக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாத முற்பகுதியில் அமெரிக்காவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஸ ஏப்ரல் 12 ஆம் திகதி நாடு திரும்பினார். இதன்போது, தமது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்காகவே அமெரிக்கா சென்றதாக கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டிருந்தார். ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அமெரிக்க அதிகாரிகளினால் வௌியிடப்படும் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் உள்வாங்கப்படும் என்பதனால், பிரஜாவுரிமை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது என அவ்வேளையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கூறியிருந்தனர். எனினும், இன்று பகிரங்கப்படுத்தப்பட்ட ஜூன் 30 ஆம் திகதி வரையான, அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் உள்வாங்கப்படவில்லை.