யாழில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர்

யாழில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

15 Aug, 2019 | 8:43 pm

Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தின் இரண்டாவது நாள் இன்றாகும்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொண்டார்.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆசி பெற்றுக்கொண்டார்.

பின்னர், 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள யாழ். மயிலிட்டி துறைமுகத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைத்தார்.

மயிலிட்டி வடக்கில் – மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 6 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு 11 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதாக நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், நிகழ்வு 12 மணிக்கே ஆரம்பமாகியது.

யாழ். திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைத்தார். இதன்போது விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே படையினர் வசமிருந்த காணிகளை அதிகளவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

படையினர் வசமுள்ள வடக்கு மக்களின் காணிகளை துரிதகதியில் விடுவிப்பதற்கான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்