ஹொங்கொங்கில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ஹொங்கொங்கில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

by Chandrasekaram Chandravadani 14-08-2019 | 8:09 AM
Colombo (News 1st) ஹொங்கொங்கில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதல் மேலும் வலுப்பெற்றுள்ளது. ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலினால், இரண்டாவது நாளாகவும் விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தினால் ஹொங்கொங் விமான நிலையம் நேற்று முன்தினம் மூடப்பட்டு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், சில ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்திற்குள் இருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், விமான நிலையத்தின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாக ஹொங்கொங் விமான நிலையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தின் முனையத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் விமான நிலையம், பயணிகளுக்கு அறிவித்துள்ளது. இதனிடையே, சீனா தனது துருப்பினரை ஹொங்கொங் எல்லைப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உளவுப் பிரிவினூடாக இந்தத் தகவல் தமக்குக் கிடைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி, தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.