விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய நல்லூர் ஆலயம் சென்ற இராணுவத் தளபதி

by Staff Writer 14-08-2019 | 7:48 PM
Colombo (News 1st) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு இன்று சென்றிருந்தார். நல்லைக்கந்தனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நல்லூர் ஆலயத்திற்கு சென்றிருந்தார். இதன்போது இராணுவத் தளபதி வழிபாடுகளிலும் ஈடுபட்டார். இதனையடுத்து, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்ததாவது,
அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் செயற்பாட்டில் இலங்கை பொலிஸாரும் இராணுவம் தலைமையிலான கடற்படையினரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அதனால் இங்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை. பிரச்சினைகள் ஏற்படாதிருக்கவே இவை அனைத்தையும் முன்னெடுத்துள்ளோம். உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் அவதானிக்கும் போது, அந்த நிலைமை தற்போது காணப்படவில்லை என கூறமுடியாது. அதனை Lone Wolf Attack என கூறலாம். தனியான நரியினால் எதனையும் செய்ய முடியும். பைத்தியக்காரர் ஒருவருக்கு ஏதேனுமொன்றை செய்ய முடியும். அவர்களிடம் இருந்தும் உங்களைக் காப்பாற்றவே இதனை செய்கின்றோம்.