பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்: மண்மேடுகள் சரிவினால் பலர் பாதிப்பு

by Staff Writer 14-08-2019 | 5:28 PM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது. பலத்த மழை காரணமாக நானுஓயா பிரதான வீதியில் நேற்றிரவு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலமொன்றும் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எடின்பரோ தோட்டத்தைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயதான மூர்த்தி இராஜேந்திரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, மஸ்கெலியா - சின்ன சோளாங்கந்த தோட்டத்திலுள்ள ஓடையொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. நோர்வூட் - நியூவேலி தோட்டத்தின் பங்களா பிரிவிலுள்ள 6 குடியிருப்புகள் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் 11 குடும்பங்களைச் சேர்ந்த 59 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நியூவேலி தமிழ் வித்தியாலயத்தில் நேற்று மாலை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவுகளை தோட்ட முகாமைத்துவம், அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் தனிநபர்கள் வழங்கி வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். மண்சரிவு அபாயம் காரணமாக நாவலப்பிட்டி - கொலபத்தன - கொங்கால பிரிவின் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் குடியிருப்புகளில் இருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் இம்மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.