விடுதலை செய்யுமாறு நளினி கோர முடியாது

தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி கோர முடியாது: தமிழக அரசு தெரிவிப்பு

by Bella Dalima 14-08-2019 | 3:28 PM
Colombo (News 1st) இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக உள்துறை செயலாளர் சார்பிலும் வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசினால் அளிக்கப்பட்ட பரிந்துரை, தமிழக ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுட்தண்டனை பெற்ற கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என தெரிவித்துள்ள தமிழக அரசு, ஆயுட்கைதிகள் தம்மை முன்கூட்டி விடுதலை செய்யுமாறு கோர முடியாது என கூறியுள்ளது. அத்துடன், கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, தண்டனைக் குறைப்பு போன்ற மாநில அரசு அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயற்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.