களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைவு

களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைவு

by Staff Writer 14-08-2019 | 7:15 AM
Colombo (News 1st) மழையுடனான வானிலையால் அதிகரித்திருந்த களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் சற்று குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று பெய்த மழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததால், இரத்தினபுரியின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றிரவு முதல் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது. இதேவேளை, பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு, யாழ்ப்பாணம், புத்தளம் மாவட்ட மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மண்சரிவு, கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் ஆகியன தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏனைய செய்திகள்