அறுவைக்காட்டில் 1300 மெட்ரிக் தொன் குப்பைகள்

அறுவைக்காட்டில் 1300 மெட்ரிக் தொன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன

by Staff Writer 14-08-2019 | 3:57 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகரில் சேகரிக்கப்பட்ட 1300 மெட்ரிக் தொன் குப்பைகள் அறுவைக்காடு குப்பை கொட்டுமிடத்தில் கொட்டப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி முதல் அறுவைக்காட்டில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்தார். இன்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்டோர் அறுவைக்காடு குப்பை கொட்டுமிடத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டனர். எதிர்வரும் நாட்களில் கொழும்பு நகரில் குப்பைகளை மூன்று கட்டங்களாக சேகரிக்க உத்தேசித்துள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார். இதற்கிணங்க உக்கக்கூடிய குப்பைகளை வாரத்தில் மூன்று நாட்களில், வீடுகள் மற்றும் நிறுவன வளாகங்களில் இருந்து சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய மற்றும் மீள்சுழற்சிக்கு உட்படுத்த முடியாத குப்பைகளை சேகரிக்க ஒரு நாள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.