அறுவைக்காட்டிற்கு கழிவுகளுடன் சென்ற லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

by Staff Writer 14-08-2019 | 7:03 PM
Colombo (News 1st) புத்தளம் - அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்தில் கொட்டுவதற்காக கொழும்பிலிருந்து கழிவுகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த சாரதியொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். புத்தளம் - மதுரங்குளி, கரிகட்டிய பகுதியில் இன்று அதிகாலை 3.45 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. கழிவுகளை ஏற்றிச்சென்ற லொறி, முன்னால் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். விபத்திற்குள்ளான இரண்டு லொறிகளிலும் இலக்கத்தகடுகள் காணப்படவில்லை எனவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். விபத்திற்குள்ளான இரண்டு லொறிகளிலும் காணப்பட்ட கழிவுகளை, வேறு இரண்டு லொறிகளுக்கு மாற்ற முயற்சித்த போது, பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த செயற்பாட்டை தமது பகுதியில் முன்னெடுக்க வேண்டாம் என பிரதேச மக்கள் வலியுறுத்தினர். எனினும், புத்தளம் பொலிஸாரின் தலையீட்டில் கழிவுகள் வேறு லொறிகளுக்கு மாற்றப்பட்டு அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டன.