தோட்டப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எமக்கு மிகுந்த புரிதல் உள்ளது: கோட்டாபய ராஜபக்ஸ

தோட்டப்பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எமக்கு மிகுந்த புரிதல் உள்ளது: கோட்டாபய ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

14 Aug, 2019 | 8:16 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டோர் தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இவர்கள் மல்வத்து விகாரைக்குச் சென்றனர். மல்வத்து பீடத்தின் மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்டதன் பின்னர் தேரருடன் இவர்கள் கலந்துரையாடினர்.

அஸ்கிரி விகாரைக்கு சென்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடமும் இவர்கள் ஆசி பெற்றுக்கொண்டனர்.

இதன் பின்னர் இந்தக் குழுவினர், மல்வத்து அநுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரரை சந்திப்பதற்கு சென்றனர். தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர், பின்னர் கண்டி செல்வ விநாயகர் கோவிலுக்கு சென்றனர்.

கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் கோட்டபய ராஜபக்ஸ, அங்கு வந்திருந்தவர்களுக்கு பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

தோட்டப் பகுதியில் தொழிலாளர்களின் வருவாயை அதிகரித்தல், இளைஞர்களின் தொழில் வாய்ப்புப் பிரச்சினை மற்றும் வீடில்லாப் பிரச்சினை குறித்து எமக்கு மிகுந்த புரிதல் உள்ளது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.

இதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோர் மீராமக்கம் பள்ளிவாசலுக்கு சென்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு இதன்போது அமோக வரவேற்பளிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்