லசந்த விக்ரமதுங்கவின் மகள் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம்

by Staff Writer 13-08-2019 | 8:22 PM
Colombo (News 1st) கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக களமிறக்கப்படும் வேட்பாளர், அவர்களுடன் இரகசிய தொடர்புகளைப் பேணுபவராக இருக்கக்கூடாது என அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. நேற்று (12) ஹோமாகவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், அஹிம்சா விக்ரமதுங்க இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். தமது தந்தையான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் பிரதமர் இதன்போது மீண்டும் கருத்துத் தெரிவித்ததாக அஹிம்சா விக்ரமதுங்க தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ தமது தந்தை உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்டமைக்கு மன்னிப்புக் கோருவாரா என ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், கோட்டாபய ராஜபக்ஸ ஒருபோதும் மன்னிப்புக்கோர மாட்டார் என அஹிம்சா விக்ரமதுங்க ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ளவரை நான்கரை வருடங்களாக பாதுகாத்தமைக்கு மன்னிப்புக் கோருவீர்களா என அவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தமது தந்தை கொலையுண்ட தினத்திலிருந்து இன்று வரை வாக்கிற்காக அந்தக் கொலை பயன்படுத்தப்படுவதாக அஹிம்சா விக்ரமதுங்க குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றியபோது தமது தந்தையின் மரணத்திற்கு நியாயத்தை நிலைநிறுத்துவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை மறந்துவிட்டீர்கள் என ரணில் விக்ரமசிங்கவிற்கு ஞாபகப்படுத்தியுள்ளார். மீண்டும் தேர்தல் காலம் வந்துள்ளதால் கொலையாளிகள் என குற்றம் சுமத்தி மீண்டும் பகிரங்கமாக கருத்துக்கள் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கருத்துக்களை வெளியிடுகின்ற நிலையில், அவரது செயலணி பிரதானி அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள் கோட்டாபய ராஜபக்ஸவுடன் அவரது வீட்டில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக அஹிம்சா விக்ரமதுங்க பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.