நகரத்தை படுகுழியில் தள்ள வேண்டாம்- ஹொங்கொங் தலைவர்

நகரத்தை படுகுழியில் தள்ள வேண்டாம் - ஹொங்கொங் தலைவர் எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 13-08-2019 | 2:00 PM
Colombo (News 1st) நகரத்தை படுகுழியில் தள்ள வேண்டாம் என ஹொங்கொங் தலைவர் கேரி லேம் (Carrie Lam), போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹொங்கொங்கில் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் ஹொங்கொங் அபாயகரமான நிலையை அடைந்துள்ளதாகவும் கேரி லேம் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து ஹொங்கொங் தலைவர் இன்று (13) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய பிரேரணைக்கு எதிராக கடந்த ஜூன் மாத இறுதியில் இந்தப் போராட்டம் ஆரம்பமானது. ஹொங்கொங் அரசு அந்த பிரேரணையை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்தபோதிலும், அந்த பிரேரணையை முழுமையாக கைவிட வேண்டும் என கோரி மக்கள் போராடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.