ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தீர்மானம் மிக்கது: துமிந்த திசாநாயக்க

by Bella Dalima 13-08-2019 | 8:55 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தீர்மானம் மிக்கது என அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க இன்று அநுராதபுரத்தில் தெரிவித்தார். அநுராதபுரத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.
நாம் இல்லாமல் ஜனாதிபதியைத் தெரிவுசெய்ய முடியாது. 50 இலட்சம் வாக்குகள் காரணமாக, பிரதேச சபைகளில் அதிக அதிகாரம் மொட்டிற்கே கிடைத்தது. இதே முடிவை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது மொட்டைச் சேர்ந்த ஒருவரால் ஜனாதிபதியாக முடியாது. அவருக்கு 15 இலட்சம் வாக்குகள் குறைவாகவுள்ளன. அவ்வாறாயின், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 இலட்சம் வாக்குகள் இன்றி எவராலும் ஜனாதிபதியாக முடியாது
என துமிந்த திசாநாயக்க குறிப்பிட்டார். ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஸவும் கலந்துரையாடியுள்ளதாகவும் இதுவரை இறுதித் தீர்வு எட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், இறுதி முடிவு கிடைத்த பின்னரே கட்சி என்ற வகையில் இணைவதா, இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் எனவும் கூறினார். இணக்கப்பாடு ஒன்றிற்கு வராமல் அங்கு சென்றால், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையோ கட்சியை சேர்ந்தவர்களையோ பாதுகாக்க முடியாமற்போகும் எனவும் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.