தென்மேற்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை; களு, கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

தென்மேற்கில் பலத்த காற்றுடன் கூடிய மழை; களு, கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2019 | 8:05 pm

Colombo (News 1st) நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் பலத்த மழையால் களு கங்கை மற்றும் கிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் நீர் மட்டம், முவகம பகுதியில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மாலா அலவதுவல குறிப்பிட்டார். தற்போது நீர் மட்டம் 6.1 மீட்டராகக் காணப்படுகின்றது.

கிங் கங்கையின் நீர் மட்டமும் உயர்வடைந்து வருவதாக மாலா அலவதுவல கூறினார்.

நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண் சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை இன்று மாலை விடுக்கப்பட்டது.

மண்சரிவு, கற்பாறைகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் ஆகியன தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீரேந்துப் பகுதிகளில் பெய்த பலத்த மழையை அடுத்து, லக்ஷபான, கெனியன் மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நேற்று திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.

மகாவலி மற்றும் களனி கங்கைகளை பயன்படுத்தும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பலத்த மழையை அடுத்து கொட்டகலை – மேபீல்ட் தோட்டத்தின் இரண்டு வீடுகளின் மீது நேற்றிரவு பாரிய மண் மேடொன்றுடன் கற்பாறை சரிந்து வீழ்ந்துள்ளது. இதனை அடுத்து, மண்சரிவு அபாய வலயமாக அந்த பகுதி பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரை பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பொலிஸார் மற்றும் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கினிகத்ஹேன பிரதேசத்தில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் ஐந்து வர்த்தக நிலையங்கள் அபாய நிலையிலுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

தென்மேற்கு பகுதியில் பலத்த மழை பெய்கின்ற நிலையில், நாட்டின் மற்றுமொரு பகுதியில் வறட்சி நிலவுகின்றது.

வறட்சி காரணமாக அம்பாறை – சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் 7,70,000 ஏக்கர் அடியாகக் காணப்பட்ட போதிலும், தற்போது 12,500 ஏக்கர் அடியாகக் காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

சேனாநாயக்க சமுத்திரத்தில் இருந்து செய்கைகளுக்காக நீரை விநியோகிக்கும் செயற்பாடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதுடன், குடிநீர் தேவைக்காக மாத்திரமே தற்போது நீர் விநியோகிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்