ஹொங்கொங்கில் விமான சேவைகள் இரத்து

ஹொங்கொங்கில் விமான சேவைகள் இரத்து

by Staff Writer 12-08-2019 | 3:35 PM
Colombo (News 1st) ஹொங்கொங்கில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சர்வதேச விமானநிலையத்தின் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறித்த விமானநிலையத்தின் பிரதான நுழைவாயிலை இடைமறித்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இன்று (12) நான்காவது நாளாகவும் தொடர்வதனால் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பரபரப்பான விமானநிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமானநிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரரகள் ஒன்றுகூடியிருந்த ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில், பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் உள்ளிட்டோர் பலர் காயமடைந்துள்ளனர். ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய பிரேரணைக்கு எதிராக கடந்த ஜூன் மாத இறுதியில் போராட்டம் ஆரம்பமானது. ஹொங்கொங் அரசு அந்தப் பிரேரணையைத் தற்காலிகமாகக் கைவிட்டதாக அறிவித்தவிட்ட போதிலும், அந்தப் பிரேரணையை முழுமையாகக் கைவிட வேண்டும் என கோரி மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.