ஜனாதிபதித் தேர்தல் தான் நடத்தப்படவுள்ளது என எம்மால் கூற முடியாது - மஹிந்த தேஷப்பிரிய

by Staff Writer 12-08-2019 | 10:07 PM
Colombo (News 1st) 18 வயதைப் பூர்த்திசெய்த இளைஞர், யுவதிகளுக்கு வாக்குரிமையைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி, ஜனநாயகத்திற்கான இளைஞர்கள் அமைப்பினர் இன்று (12) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பின்படி, 18 வயதைப் பூர்த்திசெய்த இளைஞர், யுவதிகளுக்கு வாக்குரிமை கிடைக்க வேண்டும் என்றபோதிலும், தற்போது வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் முறைமைக்கமைய 19 வயதாகும் வரை வாக்குரிமை கிடைக்காத நிலைமை காணப்படுவதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த முறைமையை மாற்றியமைக்குமாறு ஜனநாயகத்திற்காக இளைஞர் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது. இவர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து எவ்வாறான விடயம் இடம்பெறுகிறது என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, உங்களுடைய பிரச்சினையை எமக்குக் கூறுங்கள் கேள்வி - தாத்தா! எமக்கு தற்போது 18 வயதாகின்றது. வாக்குரிமை எங்கு என்றே இங்கு வந்துள்ள வாக்காளர்கள் கோருகின்றனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய:
பாட்டனார் என கூறுவதால் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் எனக்கு 5 வயதுடைய பேத்தி உள்ளார். 35 வயதுடைய ஒருவர், தமக்கு 18 வயது என கூறுகின்றார். என்னால் எதனையும் தரமுடியாது. தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரே உள்ளார். உங்களின் கோரிக்கையை ஆணைக்குழுவிடமே முன்வைக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தவே நாம் எதிர்பார்த்தோம். எனினும், எம்மால் அதனைப் பயன்படுத்த முடியாது. 2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை எம்மால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது. மே, ஜூன் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆரம்பிக்கப்பட்டால், ஒக்டோபர் 31ஆம் திகதியே பட்டியலை எம்மால் உறுதிப்படுத்த முடியும். 2019 நவம்பர் மாதம் நிறைவடையும் வரை வேட்பாளர் பட்டியலை எம்மால் பெற முடியாது. ஆகவேதான் 2018ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வாக்களிக்க வேண்டும் என அவர்கள் கூறுவது உண்மை. 19 வயதும் 6 மாதங்களையும் பூர்த்தி செய்தவர்களே இந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியும். எனினும், 2012ஆம் ஆண்டிலிருந்து இதற்காக மிகவும் சிரமப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்த சட்டமூலமொன்று உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த சட்டமூலம். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதனூடாக 18 வயதுடையவர்களுக்கு எம்மால் வாக்குரிமையை வழங்க முடியும். இதனை நீங்கள் கோர வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அல்ல. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிடமே நீங்கள் இதனைக் கொண்டு செல்ல வேண்டும்.
கேள்வி - நீங்கள் தற்போது எந்தத் தேர்தலுக்குத் தயாராகின்றீர்கள்? தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய:
சட்டத்திற்கமைய மாகாண சபைத் தேர்தலே நடத்தப்பட வேண்டும். நாம் அதற்குத் தயாராகவுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகக்கூடிய அண்மித்த தினம் செப்டெம்பர் மூன்றாவது வாரமாகும். ஜனாதிபதித் தேர்தல் தான் நடத்தப்படவுள்ளது என அதுவரை எம்மால் கூற முடியாது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு, ஜனவரி 9ஆம் திகதியிலிருந்து நாம் தயார். ஜனாதிபதியால் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடியுமல்லவா. நாம் எவ்வேளையிலும் தயாராகவுள்ள தேர்தலே, பாராளுமன்றத் தேர்தலாகும். பாராளுமன்றத்தை எவ்வேளையிலும் கலைத்து தேர்தலை நடத்த பாராளுமன்றத்தால் முடியும். எனினும், அவ்வாறு இடம்பெற மாட்டாது எனும் நம்பிக்கையில் கடந்த நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆவணங்களையும் நாம் தயாரித்துள்ளோம். மாகாண சபைத் தேர்தலை இரண்டு முறைமைகளிலும் நடத்துவதற்கான ஆவணங்களையும் தயாரித்துள்ளோம்.
கேள்வி - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை நேற்று ஏற்றுக்கொண்டார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாகவே அவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவானார். இதனால் அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகுமா?- தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய:
அது எமக்குரிய விடயம் அல்ல. அது அரசியல் கட்சிகளுக்குரிய விடயம். எமக்கு அறிவிக்கப்பட்டால் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும். அங்கே நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்சிகளுக்குள் காணப்படும் உள்ளக ஒழுக்கப் பிரச்சினையில், தேர்தல்கள் ஆணைக்குழு தலையிடாது.