நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

12 Aug, 2019 | 3:12 pm

Colombo (News 1st) மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காற்று, மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடற்பிராந்தியங்களின் காற்றின் வேகம் அதிகரிப்பதால், மீனவர்கள் மற்றும் கடற்சார் ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அக்கரப்பத்தனை – சின்னநாகவத்தை பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் மின்கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

உக்கிய நிலையில் காணப்பட்ட குறித்த மின்கம்பம், நேற்று பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையினால் சரிந்து வீழ்ந்துள்ளது.

எனினும், குறித்த மின்கம்பத்தை அகற்றுவதற்கு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகை தரவில்லை என தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யட்டியாந்தோட்டை – நூரி தோட்டத்தில் கடுங்காற்று காரணமாக லயன் குடியிருப்பிலுள்ள 8 வீடுகளின் கூரைகள் அள்சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மலையக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக இன்று (12) காலை கொட்டகலை கிறிஸ்லஸ் பாம் தோட்ட பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள 5 வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன் செய்கைகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

அத்துடன், ஹட்டன் – கொட்டகலை பிரதான வீதியிலிருந்து கிறிஸ்லஸபாம், அந்தோனிமலை தோட்டங்களுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக வீசிய பலத்த காற்றினால் 2279 வீடுகளுக்கு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில், கொழும்பு மாவட்டத்தில் 396 வீடுகளும் கம்பஹா மாவட்டத்தில் 343 வீடுகளும் களுத்துறை மாவட்டத்தில் 302
வீடுகளும் குருணாகல் மாவட்டத்தில் 197 வீடுகளும் புத்தளத்தில் 152 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதனைத் தவிர நுவரெலியா மாவட்டத்தில் 71 வீடுகளும் பதுளை மாவட்டத்தில் 69 வீடுகளும் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி கங்கையை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பிரதீப் கொடிப்பிலி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்