by Staff Writer 11-08-2019 | 2:08 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று (11) மாலை 3 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேசிய மாநாட்டில், பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம், மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுஜன பெரமுன மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரும் இன்று பெயரிடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நான்கரை வருடங்களாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பயணித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 13 அரசியல் கட்சிகளும் அண்மையில் பதிவுசெய்யப்பட்ட 11 கட்சிகளும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தவிர, தேசிய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவையும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தை தொடர்வதால், அந்தக் கட்சிக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் டளஸ் அழகப்பெரும தெரிவுத்துள்ளார்.
எனினும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.