பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவு

by Staff Writer 11-08-2019 | 4:13 PM

Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (11) நடைபெற்றது. மாநாட்டின் ஆரம்பத்தில் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் ஆலோசனையின் பேரில் மஹிந்த ராஜபக்ஸவிடம் தலைமைப் பொறுப்பு கையளிக்கப்பட்டது. கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தமது உரையின் நிறைவில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார். இந்தநிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தமிழில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் , உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பொதுமக்கள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள தலைமைத்துவம் வழங்க தாம் தயார் என தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை வருடங்களாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பயணித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 13 அரசியல் கட்சிகளும் அண்மையில் பதிவுசெய்யப்பட்ட 11 கட்சிகளும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.