தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

by Bella Dalima 10-08-2019 | 4:52 PM
Colombo (News 1st) மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்குளி - கதிரானவத்தை பகுதியில் உள்ள மாடிக்குடியிருப்பு ஒன்றில் திருடச் சென்றிருந்த போது, பெண் ஒருவர் கூச்சலிட்டதையடுத்து இந்நபர் கீழே குதித்துள்ளார். மாடிக்குடியிருப்பின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்தவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிகாலை 4.45 அளவில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளார். மட்டக்குளியை சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.