by Staff Writer 10-08-2019 | 5:30 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிற்சங்கத்தினரால் தொழிலாளர்களிடம் அறவிடப்படும் சந்தாப் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளாந்த மேலதிகக் கொடுப்பனவான 50 ரூபாவை பெற்றுக்கொடுக்காது, தங்களிடமிருந்து அதிக சந்தாப் பணம் அறவிடப்படுவதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
சில பெருந்தோட்டங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சந்தாப் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் வரை சுமார் 150 ரூபா சந்தாப் பணம் அறிவிடப்பட்டதுடன், இம்மாதம் 230 ரூபா சந்தா அறவிடப்பட்டுள்ளது.
50 ரூபா மேலதிகக் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க முன்வராத தொழிற்சங்கத்தினர், உதிரம் சிந்தி உழைக்கும் பணத்தில் 80 ரூபாவிற்கு மேல் அபகரித்துள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் பல இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி அலரி மாளிகையில் கைச்சாத்திடப்பட்டது.
நாளாந்த அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.
எனினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி, எதிர்ப்புகளுக்கு மத்தியில் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக நிர்ணயித்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், தொழிலாளர்களுக்கான நிலுவைப் பணம் இதுவரையில் வழங்கப்படவில்லை.
இந்த பின்புலத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவை வழங்க கடந்த மார்ச் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதற்காக 1.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்குவதாகக் கூறி அரசாங்கம் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
இந்த நிலையில், தொழிலாளர்களிடமிருந்து அறிவிடப்படும் சந்தாப் பணமும் 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கவாதிகள் தங்களின் கூட்டு ஒப்பந்த நிபந்தனைகளை தற்போது சுட்டிக்காட்ட முனைகின்றனர்.
எனினும், கூட்டு ஒப்பந்தத்திலுள்ள வரப்பிரசாதங்களை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க அவர்கள் எந்த வகையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்பது கேள்விக்குறியே.
பாதுகாப்பற்ற நிலையில் தோட்டத்துறையில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்காக 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் நாளொன்றுக்கு 500 ரூபாவை அடிப்படை சம்பளமாக நிர்ணயித்தனர்.
இதேவேளை, இரண்டு வருடங்களில் காலாவதியாகும் கூட்டு ஒப்பந்தம் சுமார் இரண்டரை வருடங்களின் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது, 1000 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்திய போதிலும், 700 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக நிர்ணயித்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த நிலையில், தொழிலாளர்சார் நலனை கருத்திற்கொள்ளாது, தங்களின் வருவாயை இலக்கு வைத்து தொழிற்சங்கங்கள் செயற்படுவது எந்த வகையில் நியாயமானது?