by Staff Writer 10-08-2019 | 9:02 PM
Colombo (News 1st) துன்பப்படும் மக்களை தேர்தல் காலங்களில் மாத்திரமே ஆட்சியாளர்கள் காண்கின்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது மாத்திரமே அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடுகின்றனர்.
இலங்கை வரைபடத்திலுள்ள கிராமங்கள் மற்றும் வரைபடத்தில் தேட முடியாத கிராமங்களை நோக்கி மக்கள் சக்தி குழுவினர் சென்றிருந்தனர். அவ்வகையில், மக்களின் துன்பங்களை நேரில் அவதானித்த சாட்சியாக 'மக்கள் சக்தி' விளங்குகிறது.
அதனால் சர்வமதத் தலைவர்களும் மக்கள் சக்தி திட்டத்தை பாராட்டுகின்றனர்.
மக்களின் துன்பங்களை ஆராயும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் நான்காவது கட்டம் நேற்றுடன் (09) வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் 23 நாட்கள் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
நான்காவது கட்டத்தின் நிறைவை முன்னிட்டு மல்வத்து மகா விஹாரைக்கு சென்று நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் ஆசி பெற்றுக்கொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பேராதனை பல்கலைக்கழகம் சார்பில் கலாநிதி திலன் பண்டார மற்றும் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா அமைப்பின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் தலைமையிலான நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் பிரசன்னமாகியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அஸ்கிரி பீடத்தின் உப நாயக்க தேரர் வெடருவே உபாலி தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.
மற்றுமொரு குழுவினர் அனுராதபுரம் கலாநிதி பல்லேகம ஶ்ரீநிவாச தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க ஶ்ரீ மகா போதியை மக்கள் சக்தி குழுவினர் வழிபட்டனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கேந்திரமாகக் கொண்டு மக்களின் பிரச்சினைகளை தேடிச்சென்ற மற்றுமொரு குழுவினர், நல்லூர் - நல்லை ஆதின குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளை இன்று காலை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் சென்று நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மக்கள் சக்தி குழுவினர் மன்னார் மடு திருத்தலத்திற்கு சென்று ஆசி பெற்றுக்கொண்டனர்.
பேருவளை - கெச்சிமலை தர்கா ஷெரிபுக்கு சென்ற மக்கள் சக்தி குழுவினர், துவா பிரார்த்தனைகளில் கலந்துகொண்டனர்.
தர்கா ஷெரிப்பை நிர்வகிக்கும் அஷ்ஷெய்ஹ் காலிப் அலவியதுல் காதிரி தலைமையில் துவா பிரார்த்தனை இடம்பெற்றதுடன், பேஷ் இமாம் மௌலவி மொஹமட் ஷெரிப் மொஹமட் பாசில் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
மக்கள் சக்தி திட்டத்தின் நான்காம் கட்டத்தின் நிறைவை முன்னிட்டு, கெட்டம்பே புனித யோகா தேவஸ்தானத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட மற்றுமொரு குழுவினர் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்