கொழும்பு குப்பை பிரச்சினை நீடிக்கும் சாத்தியம்

by Staff Writer 10-08-2019 | 8:23 PM
Colombo (News 1st) கொழும்பு நகரில் குவிந்துள்ள கழிவுகளை அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்தில் கொட்டும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. கொழும்பு நகர கழிவுகள் 17 டிப்பர் வாகனங்களில் நேற்றிரவு 11.30 மணியளவில் அறுவைக்காடு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. இன்று காலை மேலும் 7 டிப்பர் வாகனங்களில் அறுவைக்காடு கழிவகற்றல் நிலையத்திற்கு கழிவுகள் கொண்டுசெல்லப்பட்டதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்தார். முறையாக பிரிக்கப்பட்டு, இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்பட்டு உரிய வகையில் இந்த கழிவகற்றல் நிலையத்தில் கழிவுகள் கொட்டப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டாலும், நடைமுறை வேறாக உள்ளது. அறுவைக்காடு கழிவகற்றல் நிலையம் நிர்மாணிக்கப்பட்ட தினத்திலிருந்து இதனூடாக ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில், 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி புத்தளம் - சேரக்குளி பகுதியில் நடைபெற்ற 'கம்மெத்த' நிகழ்ச்சியில் அறுவைக்காடு பிரதேச மக்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர். மக்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் பல்வேறு பதில்களைக் கூறியபோதிலும், மக்களின் எதிர்வுகூறல் தற்போது நிதர்சனமாகியுள்ளது. உரிய முறைமையில் கழிவுகள் கொட்டப்படும் என வாக்குறுதியளித்த அதிகாரிகள், இன்று வேறொரு கருத்தைக் கூறுகின்றனர். முன்னாள் திட்டப் பணிப்பாளரான லால் பெர்னாண்டோ கூறியதாவது,
சாதாரண முகாமைத்துவத்தின் போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியன பிரிக்கப்படுகின்றன என்பது உண்மை. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கைக் கூட பிரிப்பதற்கு ஒரு எல்லையுண்டு. லன்ச் ஷீட்டில் உணவு வகை காணப்பட்டால், நடைமுறை ரீதியில் அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியாது. அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதாயின், அதிகத் தொகையை செலவிட நேரிடும். அவ்வாறான முறைமைகள் காணப்படுகின்றன. எனினும், எம்மைப் போன்ற நாடுகளுக்கு அது சிரமமானது. நடைமுறைக்கு சாத்தியமான விடயத்தைப் பார்க்க வேண்டும்.
இவ்வாறான பின்புலத்தில் கழிவுப் பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைப்பதில் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பது தௌிவாகின்றது.