இரவு வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும்

இரவு வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும்; நாளை வரை தொழிலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

by Staff Writer 10-08-2019 | 3:29 PM
Colombo (News 1st) வடக்கு, வட மத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மாலை மற்றும் இரவு வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (11) வரை கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக 10,000 ரூபா இழப்பீட்டு நிதி வழங்கப்படுவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா குறிப்பிட்டார். அதற்கமைய, கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக 19 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1141 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 17 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.