by Bella Dalima 10-08-2019 | 3:46 PM
கேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையை அடுத்து, வயநாடு மாவட்டம் - புதுமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.
கேரளாவில் கடந்த இரு நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
கனமழையால் வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு போன்ற இடங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 24 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பருவமழையால் பாரிய பாதிப்புகளுடன் அதிகளவான உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.