Colombo (News 1st) அதிகாரிகள் கவனம் செலுத்தாமையினால் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாது துன்பப்படும் மக்களைத் தேடி மக்கள் சக்தி குழுவினர் இன்றும் பல்வேறு பிரதேசங்களுக்கு பயணித்திருந்தனர்.
யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களின் பிரச்சினை தொடர்பில் மக்கள் இன்று ஆராய்ந்தனர்.
வில்பத்து சரணாலயத்திற்கு எல்லையில் அமைந்துள்ள எழுவான் குளம் - ககே வாடிய கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழில் மீன்பிடியாகும். இம்மக்கள் கடலுடன் போராடுகின்ற போதிலும், மீனுக்கான உரிய விலை கிடைப்பதில்லை என விசனம் தெரிவித்தனர். கிராம மக்களுக்கு குடிப்பதற்கும் நீரில்லை. நீரேந்து பகுதிகளில் உப்பு கலந்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும்.
மீனவக் கிராமமான எழுவான்குளம் கிராமத்தில் வன பாதுகாப்பு திணைக்களம் தற்போது எல்லையிட்டுள்ளது. புத்தளம் முகத்துவாரம் கிராம மக்களுக்கான உரிய வீதிக்கட்டமைப்பு இல்லாத காரணத்தினால், படகுகளிலேயே அவர்கள் பயணிக்கின்றனர்.
ரிதிமாலியத்த - களுகெலே - ஊவதென்ன கிராமத்திற்கு வீதியொன்று இல்லை. வீதியற்ற இந்த கிராமத்திலுள்ள பெண்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாதிருப்பதற்கு ஓர் மனதாகத் தீர்மானித்துள்ளனர்.
கூலி வேலை செய்தால் நாளொன்றுக்கு 500 ரூபாவிற்கும் குறைவான சம்பளமே கிடைக்கும். முச்சக்கரவண்டியில் பயணிக்க 3000 ரூபா தேவைப்படும். அதனால் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைக் கட்டுப்படுத்தியுள்ளோம்
என கிராமவாசி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த கிராமத்திற்கு பயணிப்பதற்கு 10 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஆரம்ப காலத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்த இந்த கிராமத்தில், சுமார் 60 குடும்பங்களே தற்போதுள்ளன.
களுகெலு கிராமத்திற்கு மின்சார வசதியில்லை. அதனால் மக்களிடம் தொலைக்காட்சிகளோ வானொலிகளோ இல்லை. நாட்டின் எந்தவொரு தகவல்களையும் இவர்கள் அறிய மாட்டார்கள்.
யாழ். மாவட்டத்திற்கு சென்றிருந்த மக்கள் சக்தி குழுவினர், மண்டைத்தீவு, வேலணை, புங்குடுதீவு, காக்கைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு சென்றிருந்தனர்.
இங்குள்ள மக்கள் பாரிய நீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். குடிப்பதற்கு நீரின்மையால், நாளாந்தம் விலைக்கு குடிநீரை வாங்க வேண்டிய நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், ஒரு துளியேனும் நீரின்றி இந்த மக்கள் அல்லல்படுகின்றனர்.
குடிப்பதற்கு, குளிப்பதற்கு என அனைத்து தேவைகளுக்குமான நீரை நாளாந்தம் இவர்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள மற்றுமொரு குழுவினர், நாவற்குழி, கோயிலா கண்டி, தனங்கிளப்பு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தனர்.
இதன்போது, நாவற்குழி மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தமது வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதை அறிய முடிந்தது.