புனர்வாழ்வு அளிக்கப்பட்டோருக்கு தொழிற்பயிற்சி

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

by Staff Writer 09-08-2019 | 3:50 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கைத்தொழில் , வர்த்தகம் மற்றும் தொழிற்பயிற்சி, திறன்விருத்தி அமைச்சு தொழிற்கற்கை நெறி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தொழிற்கற்கை நெறி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்த போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12,000 இளைஞர் யுவதிகள் உள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். சமூகமயமாக்கப்பட்ட இவர்கள், சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களின் கல்வித் தகைமை மற்றும் தொழிற்திறன் குறித்து ஆராய்ந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு முக்கியமானது எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இவர்களுக்கான பயிற்சி நிலையங்களும் அந்தந்த மாவட்டங்களில் நிறுவப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியதாக கைத்தொழில், வர்த்தகம் மற்றும் தொழிற்பயிற்சி, திறன்விருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.