கொழும்பு குப்பைகளை அறுவைக்காட்டிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 09-08-2019 | 8:52 PM
Colombo (News 1st) கொழும்பு நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை அறுவைக்காட்டிற்கு கொண்டு செல்லும் செயற்பாடு நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் சில பகுதிகளில் நான்காவது நாளாகவும் இன்று குப்பைகள் குவிந்திருந்தன. கொழும்பு நகரின் குப்பைகளை கெரவலப்பிட்டி பரிமாற்றல் நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து அறுவைக்காட்டிற்கு கொண்டு செல்லும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்தார். இவ்வாறு 15 லொறிகள் நேற்றிரவு அறுவைக்காட்டிற்கு குப்பைகளைக் கொண்டு சென்றுள்ளன. உரிய வகையில் பிரித்து, இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்படாது கொண்டுவரப்படும் கழிவுகளை, இங்கு அகற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இந்த செயற்பாட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் வனாத்தவில்லு பிரதேச சபை குறிப்பிட்டது. எனினும், இந்த செயற்பாடு உரிய வகையில் முன்னெடுக்கப்படுகின்றதா என கேட்டறிந்து, கழிவுகளை அகற்றுவதற்கு இடமளித்ததாக வனாத்தவில்லு பிரதேச சபை தவிசாளர் சமந்த முனசிங்க இன்று குறிப்பிட்டார். அடிப்படை வசதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, வனாத்தவில்லு பிரதேச சபை கோரிய 2.5 மில்லியன் ரூபா நிதி மாதாந்தம் செலுத்தப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் நேற்று (08) சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், தாம் அறிவித்துள்ள நிபந்தனைகள் உரிய முறையில் நிறைவேற்றப்படாவிடின், அறுவைக்காட்டில் குப்பைகளை அகற்றுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என பிரதேச சபை தவிசாளர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த செயற்பாட்டை வெற்றியடையச் செய்வதற்கு கொழும்பில் இருந்து குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு முன்னர் செயலாக்கத்திற்குட்படுத்த வேண்டும். லொறியொன்றுக்கு ஒரு தவணைக்கு 75,000 ரூபா நிதி செலுத்தி, மாதாந்தம் அண்ணளவாக 120 மில்லியனுக்கும் அதிக செலவில் அறுவைக்காட்டிற்கு கழிவுகளை கொண்டு செல்வதற்கு கொழும்பு மாநகர சபை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. வனாத்தவில்லு பிரதேச சபைக்கு மாதாந்தம் செலுத்தப்படும் 2.5 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாகவே இந்த நிதி செலவிடப்படுகின்றது.