மனைவியைக் கொன்றவரின் மரண தண்டனை உறுதி

மனைவியைக் கொன்றவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

by Staff Writer 09-08-2019 | 4:39 PM
Colombo (News 1st) மனைவியை கூரான கத்தியால் குத்தி கொலை செய்தவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிக்கை குற்றவாளிக்கு வாசித்து காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, மரண தண்டனை கைதியை தொடர்ந்தும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை - முள்ளிப்பொத்தானை பகுதியில் 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி முஹமது கதீஜா உம்மா என்பவரை கொலை செய்ததாக அவரது கணவரான ஹயாது முஹமது அப்துல் ஹஷீஸ் என்பவருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபரால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதியான ஹயாது முஹமது அப்துல் ஹஷீஸ் குற்றவாளி என 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பிழையானது எனவும் குற்றவாளி என்ற தீர்ப்பை இரத்து செய்து, மரண தண்டனை தீர்ப்பை தள்ளுபடி செய்யுமாறும் கோரி குற்றவாளி மேன்முறையீடு செய்துள்ளார். இந்த கோரிக்கை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தியுள்ளது.