புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளையில் மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 08-08-2019 | 8:10 PM
Colombo (News 1st) எவருடைய அரவணைப்பும் இன்றி பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் பெரும்பாலான மக்கள் தமது துன்பங்களை நம்பிக்கையுடன் மக்கள் சக்தி குழுவினரிடம் பகிர்ந்து வருகின்றனர். மக்கள் சக்தி குழுவினர் இன்றைய தினம் புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தனர். யாழ். மாவட்டத்தின் மருதன்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கேவில் கிராமத்திற்கு மக்கள் சக்தி குழுவினர் இன்று சென்றிருந்தனர். பல வருடங்களாக இந்த கிராமத்தின் வீதிகள் புனரமைக்கப்படவில்லை. தார் வீதியில் பயணிப்பது என்பது இங்குள்ள மக்களுக்கு கனவாக மாத்திரமேயுள்ளது. வெயில் காலத்தில் நடந்தும், மழைக் காலங்களில் படகுகளிலும் இம்மக்கள் பயணிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் கிளிநொச்சி நகரமுள்ளது. கிளிநொச்சி நகருக்கு பாடசாலை, வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகத்திற்கு செல்வதற்கு இவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். விவசாயத்திற்கு நீரில்லை, குறைந்தபட்சம் குடிப்பதற்கேனும் சுத்தமான நீரின்றி இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். யாழ். மாவட்டத்தின் மருதன்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கட்டைக்காடு, முள்ளியான், வெற்றிலைக்கேணி, ஆலியவளை ஆகிய கிராமங்களுக்கும் மக்கள் சக்தி குழுவினர் விஜயம் செய்திருந்தனர். மற்றுமொரு குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சிக்குளம் , ஆணை விழுந்தான், மணியங்குளம், விநாயகர் குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். குஞ்சிக்குளம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளும் வயல் நிலம் உவர்தன்மை அடைந்துள்ளமையினால் விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். இதேவேளை, அதிகாரிகளுக்கு புலப்படாத மக்களின் பிரச்சினைகளைத் தேடி, மக்கள் சக்தி குழுவினர் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்றனர். நுரைச்சோலை , வனாத்தவில்லு, சேரக்குளிய ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் அறுவடைக்கு போதிய விலை கிடைப்பதில்லை என குறிப்பிட்டனர். இந்த மக்களுக்கு உர மானிம் கூட வழங்கப்படவில்லை. இவர்களுக்கு விவசாயத்திற்கும் நீரில்லை, குடிப்பதற்கும் நீரில்லை. இங்குள்ள கிணறுகளின் நீரைக் குடித்தால் சிறுநீரக நோய் ஏற்படுவதாக மக்கள் கவலை வௌியிட்டனர். மயிலங்குளம் , வனாத்தவில்லு, தேவநுவர ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் காட்டு யானை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். பதுளை மாவட்டத்திற்கு சென்ற மற்றுமொரு குழுவினரும், பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கும் மக்களை சந்தித்தனர்.