நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 08-08-2019 | 6:57 AM
Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளிலும் கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர மேல், வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால், சில ரயில் மார்க்கங்களிலான ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிலாபம், களனிவௌி மற்றும் பிரதான ரயில் மார்க்கங்களில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன. இதேவேளை, புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி இரத்மல்யாய பகுதியில் அதிகாலை ஒரு மணியளவில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதியினூடான போக்குவரத்து சுமார் இரண்டரை மணித்தியாலங்களாக பாதிக்கப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொத்தாந்தீவு கிராம சேவகர் பிரிவிலுள்ள உபைதான் கிராமத்தை ஊடறுத்து வீசிய கடுங்காற்று காரணமாக பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. நேற்று வீசிய காற்று காரணமாக 6 வீடுகள் பகுதியளவிலும் உணவகம் ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. நேற்று அதிகாலை பள்ளிவாசல்பாடு கிராமத்தில் வீசிய கடுங்காற்று காரணமாக ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக நியூஸ்​பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் மலையகத்திலும் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய செய்திகள்