டெங்குக் காய்ச்சல்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை

டெங்கு காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

by Staff Writer 08-08-2019 | 8:13 AM
Colombo (News 1st) டெங்குக் காய்ச்சலுக்காக அஸ்பிரின் உள்ளிட்ட சில மரு​ந்துவகைகளைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்பிரின் மற்றும் ஏனைய அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் டெங்கு நோயாளர்களின் உடல்நிலை மோசமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பல மாவட்டங்களில் டெங்கு நோய்த் தாக்கம் குறைவடைந்துள்ள போதிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நோய்த்தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அஸ்பிரின், இபுப்ரோபென், டைக்லோபினொக் சோடியம் மற்றும் மெபனமிக் அசிட் உள்ளிட்ட சில மருந்துவகைகளை டெங்கு நோயாளர்கள் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது. இதனால் டெங்கு நோயாளர்களுக்கு இத்தகைய மருந்துகளைப் பரிந்துரைப்பதை வைத்தியர்கள் தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.