கொழும்பின் குப்பைகளை அகற்றும் செயற்பாடு ஸ்தம்பிதம்; சுகாதாரப் பிரச்சினை ஏற்படும் அபாயம்

by Staff Writer 08-08-2019 | 8:13 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றும் செயற்பாடு மீண்டும் தடைப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக இந்நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர். கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் கெரவலப்பிட்டியவில் அகற்றப்படுவதை நிறுத்துவதற்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு கடந்த திங்கட்கிழமை (5) தீர்மானித்தது. கழிவகற்றல் பிரிவின் கொள்ளளவு அதிகரித்ததால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்தது. அதற்கு தீர்வாக புத்தளம் - அறுவைக்காடு பிரதேசத்திலுள்ள புதிய பிரிவில் கழிவகற்றல் செயற்பாட்டை ஆரம்பிக்குமாறு அமைச்சு குறிப்பிட்டது. எனினும், புத்தளத்திற்கு கழிவுகளை கொண்டு செல்லும் செயற்பாடு உரிய முறையில் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை சேகரிக்கும் செயற்பாடு தடைப்பட்டது. கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் இன்று முற்பகல் கழிவுகள் குவிந்து காணப்பட்டன. டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள மழையுடனான காலப்பகுதியில், இவ்வாறு கழிவுகள் குவிகின்றமை சுகாதார ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு மாநகர எல்லைக்குள் நாளாந்தம் 550 மெட்ரிக் தொன் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிட்டது. மூன்று நாட்களாக சேகரிக்கப்பட்ட 1650 மெட்ரிக் தொன் கழிவுகள் தற்போது ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன. கழிவுகளை அகற்றுவதற்கு உரிய இடமொன்று இன்மையால், அவற்றை சேகரிக்கும் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மாநகர சபை ஊழியர்கள் கூறினர். மாநகர ஆணையாளர் அவ்வாறு கூறினாலும் அறுவைக்காட்டிற்கு குப்பை கொண்டு செல்வது அவ்வளவு இலகுவானதல்ல. அறுவைக்காட்டில் கொழும்பின் குப்பைகளைக் கொட்ட வனாத்தவில்லு பிரதேச சபை மாதாந்தம் 2.5 மில்லியன் பணத்தைக் கோரியுள்ளது. அத்துடன், 10 மெட்ரிக் தொன்னை ஒரு தடவையில் கொண்டு செல்ல முடியுமான, லொறியொன்றுக்கு ஒரு தடவைக்கு 75,000 ரூபாவை மாநகர சபை செலுத்த வேண்டும் என மாநகர ஆணையாளர் தெரிவித்தார். கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் 550 மெட்ரிக் தொன் குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக 55 லொறிகளை ஈடுபடுத்த வேண்டும். அதன்படி, ஒரு நாளைக்கு அறுவைக்காட்டிற்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கு மாத்திரம் சுமார் 4.12 மில்லியன் ரூபாவை செலவு செய்ய வேண்டும். மாதாந்தம் குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக மாத்திரம் 123.75 மில்லியன் ரூபாவை மாநகர சபை செலவு செய்ய வேண்டும். இதேவேளை, கொழும்பின் குப்பைகளை அறுவைக்காட்டிற்கு கொண்டு செல்வதில் மற்றுமொரு பிரச்சினை எழுந்துள்ளது. மாதாந்தம் 2.5 மில்லியனை கோரியுள்ள வனாத்தவில்லு பிரதேச சபை அந்தப் பணம் மாத்திரம் போதுமானது அல்லவென கூறியுள்ளது. எமது நாட்டில் கழிவகற்றல் திட்டத்திற்கு வெற்றிகரமான தீர்வு இதுவரை காணப்படாத நிலையில், 27,000 மெட்ரிக் தொன் கழிவுகள், வௌிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமல்லவா? இந்த கழிவுப்பொருட்கள் கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் குவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நகரில் ஒரு நாளைக்கு 550 மெட்ரிக் தொன் கழிவுப்பொருட்கள் குவிக்கப்படுகிறது என்றால், வௌிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்கள் 49 நாட்கள் சேகரிக்கப்படும் கழிவுகளுக்கு சமமானது. கொழும்பின் கழிவுப்பொருட்களை மீள் சுழற்சி செய்ய முறையான திட்டம் இல்லாத பின்புலத்தில், வௌிநாட்டில் இருந்து என்ன நோக்கத்தில் கழிவுப்பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? இலாபத்தை நோக்காகக் கொண்டு நாட்டு மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா?