அலோசியஸின் பிணை நிபந்தனையை தளர்த்துமாறு உத்தரவு

அர்ஜுன் அலோசியஸின் பிணை நிபந்தனையை தளர்த்துமாறு உத்தரவு

by Staff Writer 08-08-2019 | 6:53 PM
Colombo (News 1st) பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், நாளாந்தம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற பிணை நிபந்தனையை தளர்த்துமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். அர்ஜுன் அலோசியஸ் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி சஜித் ஜயவர்தன முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு கோட்டை பிரதம நீதவான், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி கையொப்பமிட அர்ஜுன் அலோசியஸிற்கு அனுமதி வழங்கியுள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு பின்னர் இதுவரையில் தமது கட்சிக்காரருக்கு அறிவிக்கப்படவில்லை என்பதால், அதுகுறித்து அறிவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கியினால் தடை விதிக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கின் நிதி, குறித்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதாலும், அதனை மன்று ஏற்றுக்கொண்டுள்ளதாலும், வங்கிக் கணக்குகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான உரிமை பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு உண்டு என நீதவான் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக வங்கிக் கணக்கிற்கான தரவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.