பலத்த காற்றினால் 271 வீடுகள் சேதம்

பலத்த காற்றினால் 271 வீடுகள் சேதம்

பலத்த காற்றினால் 271 வீடுகள் சேதம்

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 8:47 pm

Colombo (News 1st) பலத்த காற்று காரணமாக 271 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, புத்தளம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று இரவு வீசிய கடும் காற்று மற்றும் பலத்த மழை காரணமாக புத்தளம் – கல்பிட்டிய, தளுவ பகுதியிலுள்ள 5 வர்த்தக நிலையங்களும் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

அத்துடன், தளுவ புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக்கட்டடத்தின் கூரையும் சேதமடைந்துள்ளது.

தெரணியகல – உடபாகே தோட்டத்தில் லயன் குடியிருப்புகள் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அவிசாவளை – பென்ரிட் தோட்டத்தில் நேற்று இரவு வீசிய காற்றினால் 8 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

எட்டியந்தோட்டை – லவன்ட் தோட்டம் மற்றும் கிதுல்கல கிக்கிரிகொல்லாவ பகுதிகளில் நேற்று இரவு வீசிய காற்றினால் 4 வீடுகளின் கூரைகளுக்கு சேதமேற்பட்டுள்ளன.

வவுனியாவில் நேற்று மாலை திடீரென வீசிய கடும் காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெண்கல செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம், பெரியபுளியங்குளம் மற்றும் முதலியார் குளம் ஆகிய பகுதிகளில் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி வடக்கு பகுதிகளிலும் பலத்த காற்றினால் 6 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் வீசிய கடும் காற்றின் காரணமாக தி அல் தாரிக் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள பனை மரம் ஒன்று வீட்டொன்றின் மீது முற்றாக சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பெண் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீர்கொழும்பு – தளுபத்தை, இண்டர்சீட்வத்தை பகுதியை ஊடறுத்து வீசிய காற்றினால் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்