நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 5:47 pm

Colombo (News 1st)  திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

மரண தண்டனையை உறுதிப்படுத்தியமைக்கான தீர்ப்பு அறிக்கை திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீனன்குடா வௌ்ளை மணல் கிராமத்தை சேர்ந்த தாஜூடீன் சமூன் என்பவரை 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி கொலை செய்ததாக, சரீப்தீன் மொஹமட் பௌசர் என்பவருக்கு எதிராக திருகோணலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை நிறைவு பெற்று, 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிரதிவாதியான சரீப்தீன் மொஹமட் பௌசர் கொலை குற்றவாளி என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக மரண தண்டனை கைதி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பும், மரண தண்டனை தீர்ப்பும் சரியானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேன்முறையீட்டு தீர்ப்பை வாசித்துக்காட்டுவதற்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளியை செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி மன்றில் ஆஜராக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டார்.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்