கொழும்பு குப்பைகள் இன்று முதல் அருவக்காட்டில் கொட்டப்படும் 

கொழும்பு குப்பைகள் இன்று முதல் அருவக்காட்டில் கொட்டப்படும் 

கொழும்பு குப்பைகள் இன்று முதல் அருவக்காட்டில் கொட்டப்படும் 

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2019 | 11:52 am

Colombo (News 1st) கொழும்பு நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் இன்று (08) முதல் புத்தளம் – அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் கொட்டப்படவுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று (07) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதை அடுத்து, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா கொடுப்பனவை வண்ணாத்திவில்லு பிரதேச சபை கோரியிருந்ததாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு கொழும்பு மாநகர சபையின், கழிவகற்றும் ஒப்பந்த நிறுவனத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து, இன்று முதல் அருவக்காட்டில் குப்பைகள் கொட்டப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நாளாந்தம் சுமார் 550 மெட்ரிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதுடன், அதில் 200 மெட்ரிக் தொன் குப்பைகள் உக்காத குப்பைகளாகும்.

கொழும்பிலிருந்து அருவக்காடு கழிவகற்றல் தொகுதிக்கு குப்பைகளைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் வாகனம் ஒன்றுக்கு 75,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த நிறுவனத்தினால் 10 மெட்ரிக் தொன் குப்பைகள் மாத்திரமே ஒரு தடவையில் கொண்டு செல்லப்படவுள்ளன.

இதன்படி, நாளொன்றில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவின் பிரகாரமே அருவக்காட்டிற்கு கொண்டுசெல்லப்படும் குப்பைகளின் அளவு தீர்மானிக்கப்படவுள்ளது.

தற்போது வாகனங்களில் காணப்படும் குப்பைகள், அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் கொட்டப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் கொழும்பில் அண்மைய நாட்களில் பாதிக்கப்பட்ட குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கைககள், இன்று (08) முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன.

அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் நாளொன்றுக்கு 600 மெட்ரிக் தொன் குப்பைகளைக் கொட்டுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கேட்டறிவதற்கு வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தலைவரை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்