சுஷ்மா ஸ்வராஜின் உடல் அக்கினியில் சங்கமம்

சுஷ்மா ஸ்வராஜின் உடல் அக்கினியில் சங்கமம்

by Bella Dalima 07-08-2019 | 7:09 PM
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் காலஞ்சென்ற சுஷ்மா ஸ்வராஜின் உடல் இன்று மாலை அக்கினியில் சங்கமமானது. மாரடைப்பு காரணமாக டெல்லியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், சிகிச்சை பலனின்றி 11 மணியளவில் உயிரிழந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜின் உடல் அரச மரியாதையுடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. பா.ஜ.க தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல், லோதி சாலை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சுஷ்மா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே அரசியல் பேதமின்றி பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "மிக சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினர் சுஸ்மா ஸ்வராஜ்'' என ராகுல் காந்தி ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேசத் தலைவர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு பின்னர் இந்தியாவின் வௌிவிவகார அமைச்சராகவிருந்த இரண்டாவது பெண்ணாக சுஷ்மா சுவராஜ் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.