கொழும்பு குப்பைகள் தொடர்பில் தீர்வு கிட்டுமா?

கொழும்பு குப்பைகளைக் கொட்டுவது தொடர்பில் தீர்வு கிட்டுமா?

by Staff Writer 07-08-2019 | 9:27 AM
Colombo (News 1st) கொழும்பு மாநாகரசபைக்கு உட்பட்ட பகுதி குப்பைகளை, அருவக்காட்டில் கொட்டப்படுவதற்கான இணக்கப்பாடு இன்று எட்டப்படலாம் என, கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இன்று (07) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், குப்பைகளைக் கொட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள், வாகனங்களிலிலேயே காணப்படுவதாக கொழும்பு மாநகர ஆ​ணையாளர் தெரிவித்துள்ளார். அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா கொடுப்பனவு வழங்க வேண்டும் எனவும் கொழும்பு மாநகர ஆ​ணையாளர் பாலித நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொடுப்பனவு தொடர்பில் மீண்டும் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை, அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் கொட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் 600 தொன் குப்பைகளைக் கொட்டுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.