சுஷ்மா சுவராஜ் காலமானார்

இந்தியாவின் முன்னாள் வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

by Chandrasekaram Chandravadani 07-08-2019 | 9:00 AM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் மத்திய வௌிவிவகார அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவருமான சுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj), தனது 67 வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக புதுடில்லியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்றிரவு (06) அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், சிகிச்சை பலனின்றி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. சுஷ்மாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதேவேளை, மிகச் சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு, நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து தாம் அதிர்ச்சியுற்றதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.