அதிகாரிகளின் பார்வை திரும்பாத கிராமங்களில் மக்கள் சக்தி குழுவினர்

by Staff Writer 07-08-2019 | 8:15 PM
Colombo (News 1st) முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களினால் மக்களின் நிதி வீண்விரயமாக்கப்படும் நிலையில், அபிவிருத்தியின் நிழலைக்கூட கண்டிராத மக்கள் தமது பிரச்சினைகளை மிகுந்த நம்பிக்கையுடன் மக்கள் சக்தி குழுவினரிடம் கூறி வருகின்றனர். புத்தளம், கிளிநொச்சி மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை மக்கள் சக்தி குழுவினர் இன்று சந்தித்தனர். அதிகாரிகளின் பார்வை திரும்பாத கிராமங்களைத் தேடிச்செல்லும் மக்கள் சக்தி குழுவினர் இன்று கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு சென்றிருந்தனர். யுத்தத்தினால் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய கிளிநொச்சி மக்கள் தற்போது குடிநீரின்றி பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர். நிரந்தரமான வீடின்றி தற்காலிக இருப்பிடங்களில் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. பச்சிளைப்பள்ளி, ஆச்சிநகர், இயக்கச்சி, முகமாலை ஆகிய பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மக்கள் சக்தி குழுவினர் இன்று பதிவு செய்துகொண்டனர். மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் குழுவினர் இன்று புத்தளத்திற்கும் சென்றனர். கற்பிட்டி, வெல்லங்கர, ரெட்பானா மற்றும் தியசென்புர ஆகிய கிராம மக்களின் பிரதான ஜீவனோபாயம் விவசாயமாகும். எனினும், விவசாயத்திற்கு போதிய நீரின்மையால் இம்மக்கள் அல்லலுறுகின்றனர். காட்டு யானை அச்சுறுத்தலால் அல்லலுறும் தம்பகொல்ல கிராம மக்களை பதுளைக்கு சென்றுள்ள மக்கள் சக்தி குழுவினர் சந்தித்தனர். மஹியங்கனை, கல்போருவ, பெரியல் சந்தி உள்ளிட்ட கிராம மக்களின் பிரச்சினைகளையும் மக்கள் சக்தி குழுவினர் இன்று பதிவு செய்துகொண்டனர்.