by Staff Writer 07-08-2019 | 4:59 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.ரிஸ்வான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை தாமதமடைவதாக ஏற்கனவே மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தமைக்கு அமைய, இது குறித்த முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
விசாரணைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை அதிகாரிகள் முழுமையாக வழங்கவில்லையென தெரிவித்து பொலிஸார் இன்று மன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
எனினும், பொலிஸாரால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை திருப்தி அளிக்காமையால், விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வந்தாறுமூலை - பலாச்சோலை கிராமத்தை சேர்ந்த 9 வயதான விஜயகாந்த் விதுலக்ஷன் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
எனினும், விதுலக்ஷனின் மரண அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்கவில்லை என அவரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.