வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வரி திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 06-08-2019 | 5:41 PM
Colombo (News 1st) வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வரி திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள், சுற்றுலாத்தளங்கள், உணவக வணிக நடவடிக்கைகளுக்காக அரச வங்கிகளினூடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வௌிநாட்டுப் பணத்தை தேச நிர்மாண வரியில் இருந்து விடுவிக்கவுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் களியாட்டங்கள் தொடர்பான பயணங்களுக்கான வரியும் தேச நிர்மாண வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் பலனை அடுத்த மாதம் முதல் பிரதான ஒப்பந்தக்காரர்கள் பெற்றுக்கொள்ள முடியும். திட்டமிடப்படாத மாணிக்கக்கல் இறக்குமதியின் போது சுத்திகரிக்கப்படாத பாம் எண்ணெயில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் எண்ணெய்க்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது. தொடர்மாடி வீடுகளை அமைக்கும் பொழுது அதற்கு 25 மில்லியன் ரூபாவிற்கும் குறைந்த செலவு ஏற்படுமாயின் அந்த வீடமைப்பு திட்டத்திற்கு பெறுமதிசேர் வரி அறவிடப்படமாட்டாது என நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரவு செலவு யோசனைக்கு அமைய ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்ட முதலீட்டு சபையின் கீழுள்ள நிறுவனங்கள் ஆடைகளை உள்நாட்டில் விற்பனை செய்யும் போது பெறுமதி சேர் வரியை ஒரு அலகுக்கு 75 வீதத்தில் இருந்து 100 வீதம் வரை அதிகரித்ததாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து புதிய திருத்தங்களும் சட்டமூலமாக்கப்பட்டதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.