இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்தும் மௌனம்

தொலைக்காட்சி உரிமம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்தும் மௌனம்

by Staff Writer 06-08-2019 | 9:20 PM
Colombo (News 1st) கணக்காய்வு திணைக்களத்தினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தொலைக்காட்சி உரிமம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகின்றது. தொலைக்காட்சி உரிமத்திற்காக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 1,87,084 அமெரிக்க டொலர்கள் அமெரிக்க வங்கியொன்றுக்கு அனுப்பப்பட்டமை கடந்த காலத்தில் உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான தொலைக்காட்சி உரிமத்தில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலரை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி அதில் முக்கியமானது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுதந்திரக் கிண்ணத் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் தொடர்பில் வாய்மொழி மூல பதில்களை எதிர்பார்த்து பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தவறான பதில்களை வழங்கியது. லகாடியா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வழங்கிய சேவைக்காக 35,910 அமெரிக்க டொலர்களை வழங்கியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா இதன்போது தெரிவித்திருந்தார். எனினும், அந்த தொகைக்கு மேலதிகமாக 3,39,025 அமெரிக்க டொலர்கள் லகாடியா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு தரகர் கூலியாக வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தவை தொடர்பில் வலுவான பதிலொன்றை வழங்கியிருந்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த ஊடக அறிக்கையில் பயன்படுத்தியிருந்த சில சொற்பதங்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவனம் போன்ற உயரிய நிறுவனத்திற்கு பொருத்தமானதா என்பது தொடர்பில் கேள்வி எழுகின்றது. இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோர் நியூஸ்ஃபெஸ்ட் எழுப்பிய வினாக்களுக்கு இன்னும் பதில் வழங்காமையும் கேள்விக்கு வித்திடுகிறது. 5.5 மில்லியன் டொலரை வேறு ஒரு கணக்கிற்கு அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் 1,87,084 அமெரிக்க டொலர்கள் அமெரிக்க வங்கியொன்றுக்கு அனுப்பப்பட்டமை ஆகியவை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் வழங்கும் பதில் என்ன? இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோர் ஊடக அறிக்கை வெளியிடும் ​போது காட்டிய ஆர்வத்தை இந்த வெளிக்கொணர்வுகள் தொடர்பில் காட்டாமைக்கு காரணம் இந்த கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்டவர்களை பாதுகாக்கும் முயற்சியா?