காஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன?

காஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன?

by Bella Dalima 06-08-2019 | 4:26 PM
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவுகள் 35A மற்றும் 370 பற்றி தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. காஷ்மீருக்கு மட்டும் ஏன் இந்த சலுகைகள் வழங்கப்பட்டன என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுகின்றன. இதற்கு விடை காண வேண்டுமென்றால் இதன் தொடக்கப்புள்ளியை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது இப்போது இருப்பது போன்று ஒருங்கிணைந்த முழுமையான இந்தியாவாக இருக்கவில்லை. 100-க்கும் மேற்பட்ட மன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நாங்கள் இந்தியாவுடன் சேர மாட்டோம், தனி நாடாக இருப்போம் என்று கூறினார்கள். அதுபோல பிரான்ஸ் நாட்டின் பகுதிகளாக இந்தியாவின் சில இடங்கள் இருந்தன. இந்தியாவை வலுவான நாடாக மாற்ற வேண்டுமானால் மன்னர்கள் வசம் இருக்கும் பகுதியையும் பிரான்ஸ் வசம் இருக்கும் பகுதியையும் இந்தியாவுடன் சேர்க்க வேண்டும் என்ற நிர்பந்தம் உருவானது. அந்த கால கட்டத்தில் மத்திய உள்துறை மந்திரியாக சர்தார் வல்லபாய் பட்டேல் பொறுப்பேற்று இருந்தார். அவர்தான் அதிரடியாக செயற்பட்டு மன்னர்கள், குறுநில மன்னர்களை எல்லாம் அடிபணிய செய்தார். இதனால் ஒருங்கிணைந்த இந்தியா உருவானது. அவர் மிக துணிச்சலாக இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதால் இன்று வரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். சர்தார் வல்லபாய் பட்டேல் மன்னர்களை எல்லாம் பணிய வைத்து அவர்களது நிலங்களை இந்தியாவுடன் சேர்த்தபோது காஷ்மீர் மாநிலத்தில் மன்னர் ஹரிசிங் தலைமையில் தனி ஆட்சி நடந்து வந்தது. மன்னர் ஹரிசிங் மிகப்பெரிய நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரிடம் பல தடவை சர்தார் வல்லபாய் படேல் பேசியும் அவர் பணியவில்லை. 1949 ஆம் ஆண்டு வரை இதே நிலை நீடித்தது. சில நிர்வாக சிக்கல்கள் காரணமாக காஷ்மீரை அதிரடியாக இந்தியாவுடன் சேர்க்க முடியாத நிலையில் சர்தார் வல்லபாய் படேல் இருந்தார். எனவே அவர் மன்னர் ஹரிசிங்கிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியபடி இருந்தார். 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் மூலம் காஷ்மீருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் எந்நேரத்திலும் காஷ்மீருக்குள் ஊடுருவும் என்ற நிலை இருந்தது. இதைத் தொடர்ந்தே காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க மன்னர் ஹரிசிங் முன் வந்தார். அப்போது அவர் காஷ்மீர் மாநில மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். அந்த நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை சர்தார் வல்லபாய் பட்டேல் ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டார். இதைத் தொடர்ந்து மன்னர் ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு 3 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். ஷேக் அப்துல்லாவை உள்ளடக்கிய அந்த மூவர் குழு இந்திய அரசியல் சாசன சபையில் இடம்பெற்று பேச்சுவார்த்தையை நடத்தியது. சர்தார் வல்லபாய் பட்டேலுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து பிரதமர் நேரு இந்த விவகாரத்தில் தலையிட்டார். அவர் சட்ட மந்திரியான அம்பேத்காரை காஷ்மீர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், காஷ்மீருக்கு தனி சட்ட திட்டங்கள் வேண்டும் என்று ஷேக் அப்துல்லா கேட்டதால் அதிருப்தி அடைந்த அம்பேத்கார் அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இயலாது என்று மறுத்து விட்டார். வல்லபாய் பட்டேல், அம்பேத்கார் ஆகியோர் மன்னர் ஹரிசிங், ஷேக் அப்துல்லாவின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தனர். இதையடுத்து, பிரதமர் நேரு யாரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஆலோசித்தார். அப்போது அவருக்கு தமிழகத்தைச் சேர்ந்த கோபாலசாமி அய்யங்கார் பற்றி நினைவு வந்தது. கோபாலசாமி அய்யங்கார் நேரு அமைச்சரவையில் இலாகா இல்லாத மந்திரியாக நியமனம் செய்யப்பட்டிருந்தார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் 1905 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உயர் பதவி வகித்தவர். அதன் பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். மத்திய அமைச்சரவையில் ரயில்வே போக்குவரத்து, பாதுகாப்பு உட்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். எனவே அவரை வைத்து பேச்சுவார்த்தை நடத்த நேரு முடிவு செய்தார். அதன்படி, காஷ்மீர் குழுவுடன் கோபாலசாமி அய்யங்கார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்துதான் காஷ்மீர் மாநிலத்திற்கும், காஷ்மீர் மக்களுக்கும் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வல்லபாய் பட்டேலுக்கும், அம்பேத்காருக்கும் இதில் உடன்பாடில்லை. என்றாலும் காஷ்மீர் இந்தியாவுடன் வந்தால் போதும் என்று அமைதியாக இருந்தனர். இந்த சூழ்நிலையில் பிரதமர் நேரு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்து 370 ஆவது சட்டப் பிரிவை காஷ்மீருக்காக கொண்டு வந்தார். இந்த பிரச்சினையில் காஷ்மீர் குழுவுக்குதான் இறுதி வெற்றி கிடைத்தது. கோபாலசாமி அய்யங்கார் இந்தியாவிற்கு சாதகமான பல வி‌டயங்களை எடுக்க வைத்தார். அதற்கு பிரதிபலனாக காஷ்மீர் மக்களுக்கு சில சலுகைகள் வழிவகை செய்யப்பட்டன. காஷ்மீருக்கு தனி கொடி, காஷ்மீர் மாநில மக்களின் சொத்துக்களை மற்ற மாநில மக்கள் வாங்க முடியாது. மற்ற மாநில மக்கள் அங்கு தொழில் செய்ய முடியாது போன்றவை கொண்டுவரப்பட்டன. அதன் பிறகு காஷ்மீர் மாநில பூர்வீக நிரந்தர குடிமக்கள் யார் என்ற பிரச்சினை எழுந்தது. இதை தீர்மானிக்க 35A சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டது. 1954 ஆம் ஆண்டு இந்த 35A சட்டப்பிரிவு, 370 ஆவது சட்டத்துடன் சேர்க்கப்பட்டது. அதன் மூலம் காஷ்மீர் மாநில பூர்வீகக் குடிமக்கள் வரையறுக்கப்பட்டனர். அவர்கள் மட்டுமே சலுகைகளை அனுபவித்து வந்தனர். அம்பேத்காரும், வல்லபாய் பட்டேலும் இந்த சட்டங்களை விரும்பாததைப் போல பல்வேறு கட்சி மூத்த தலைவர்களும் இந்த சிறப்பு அந்தஸ்து சட்டத்தை விரும்பவில்லை. குறிப்பாக பாரதிய ஜனதாவின் ஆணிவேரான ஜனசங்கத்தினர் 370 ஆவது சட்டப்பிரிவை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர். ஆனாலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்ததால் இந்த சட்டமும் தொடர்ந்தது. என்றாலும் மோடியும், அமித்ஷாவும் ஒருங்கிணைந்து மிக துணிச்சலாக அந்த சட்டப்பிரிவை அதிரடியாக நீக்கியுள்ளனர். இதன் மூலம் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகி இருப்பதாக நம்புகின்றனர்.        

Source: Maalaimalar