ஹாங்காங்கில் 5 இலட்சம் பேர் போராட்டம்: 230 விமான சேவைகள் இரத்து

ஹாங்காங்கில் 5 இலட்சம் பேர் போராட்டம்: 230 விமான சேவைகள் இரத்து

ஹாங்காங்கில் 5 இலட்சம் பேர் போராட்டம்: 230 விமான சேவைகள் இரத்து

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2019 | 4:55 pm

ஹாங்காங்கில் 5 இலட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியதுடன், 230 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

ஹாங்காங்கில் குற்றவியல் வழக்குகளில் சிக்குகின்றவர்களை சீனாவிற்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் ஜனநாயக ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

ஆரம்பத்தில் தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்த ஹாங்காங் நிர்வாகம் மக்களின் தொடர் போராட்டத்திற்கு அடிபணிந்தது. கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்தார்.

ஆனாலும், போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. திருத்த சட்டத்தை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக வார இறுதி நாட்களில் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் பேரணி நடத்தியும், அரச அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்டும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின் போது பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்து வருகிறது. ஆனாலும், போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

வார இறுதி நாட்களில் மட்டும் நடந்து வந்த போராட்டங்கள் தற்போது வார நாட்களிலும் தீவிரமடைந்துள்ளன.

இதனால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை மறித்தும் போராட்டம் நடத்தினர். அத்துடன், விமான நிலையங்களுக்கு செல்லும் பிரதான வீதிகளையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர். இதனால் விமான நிலைய பணிகள் பாதிக்கப்பட்டு, விமான சேவை முடங்கியது. 230 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

நேற்றைய போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பஸ் ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் இணைந்து கொண்டனர். சுமார் 5 இலட்சம் பேர் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்