குரலற்ற மக்களைத் தேடி வவுனியா நோக்கிப் பயணம்

குரலற்ற மக்களைத் தேடி வவுனியா நோக்கிப் பயணம்

எழுத்தாளர் Staff Writer

06 Aug, 2019 | 9:04 pm

Colombo (News 1st) குரலின்றி வாழும் மக்களின் குரலாக ஒலிக்கும் மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் 4 ஆம் அத்தியாயம் இன்றும் தொடர்ந்தது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு, பட்டிக்குடியிருப்பு, அரியாமடு, தாஞ்சுறாமோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு மக்கள் சக்தி குழுவினர் சென்றிருந்தனர்.

நெடுங்கேணியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வருதோடை கிராம மக்களின் பிரதான பிரச்சினையாக யானை ​வேலியின்மை காணப்படுகின்றது. ஒலுமடு என்ற இடத்தில் 2 வருடங்களுக்கு முன் கொண்டு வந்து குவிக்கப்பட்ட கட்டைகள் இதுவரை அவ்வாறே காணப்படுகின்றன. ஆனால், இதுவரை யானை வேலி அமைக்கப்படவில்லை. இதனால் 3 கிராமங்களைச் சேர்ந்த 700 குடும்பங்கள் யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

150 குடும்பங்கள் வாழும் பட்டிக்குடியிருப்பு பிரதேசத்திற்கு நெடுங்கேணியிலிருந்து செல்லும் 13 கிலோமீட்டர் பாதை இதுவரை புனரமைக்கப்படவில்லை. அத்துடன், இங்கு இரண்டு குளங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதான ஜீவனோபாயமான விவசாயம் சிறுபோக நெற்செய்கை செய்ய முடியாததால் பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டடை பிரிந்த குளத்தை பொறுத்தளவில், விவசாயம் செய்வதற்காக கிணறு தோண்டியும் நீர் வராமையால் மக்கள் செய்வதறியாது உள்ளனர். சொந்த விவசாயக் காணி கைவசமிருந்தும் இவர்கள் கூலித்தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாஞ்சுறாமோட்டை 43 குடும்பங்கள் வாழும் ஓர் கிராமம். காடு போல் காணப்படும் இப்பகுதியில் 27 குடும்பங்கள் இந்தியாவிலிருந்து வந்து மீளக்குடியமர்ந்துள்ளனர். இவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்