ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து இரத்து

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து இரத்து

by Staff Writer 05-08-2019 | 4:53 PM

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 35 ஏ மற்றும் 370 ஆவது சட்டப்பிரிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிவதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயற்படுமெனவும் சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் செயற்படுமெனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிற மாநிலங்பகளை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் அசையா சொத்துக்களை பெற முடியாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கென தனியான தேசிய கொடியும் அரசியலமைப்பும் காணப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆளுநரால் நியமிக்கப்படும் ஒருவரே முதல்வராக முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவும் சூழலில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. இதன்போதே இந்த அறிவிப்புகள் வௌியிடப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமை ஏன் எனவும் இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அளிக்கும் விளக்கங்கள் மாத்திரமே அவைக்குறிப்பில் இடம்பெறுமெனவும் முக்கிய பிரேரணைகள் நிறைவேற்றப்படுமெனவும் குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு பதில் வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து இரத்து செய்யப்படுவதாக அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் அறிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூடியமை குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறாயினும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்துக்கள் இரத்து செய்யப்படக்கூடாது என எதிர்கட்சியினரால் வலியுறுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, காங்கிரஸ் சிரேஷ்ட தலைவர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ்  கட்சியினர் இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன